Saturday, October 3, 2020

அவள்!

 

இரவு வானம்!

நட்சத்திர கூட்டம்!

இருந்தும்,

முழு நிலவாய்

வட்டமிட்டு தனித்திருந்தாள்!

துலைந்து விடவில்லை;

தன்னை திரும்ப தேடிக்கொண்டாள்!

தனிமையில் மிளிர்ந்து நின்றாள்- அவள்!

மெல்ல மெல்ல....

மிளிரும் அவள் ஒளியில் பிரகாசிக்க துவங்கியது,

சூழ்ந்த அவள் இருளும்; தனிமையும்!


Sunday, September 29, 2019

முடியும் பயணங்கள்!

மேகங்கள் தொட்டு;
பல உயரங்கள் தாண்டி;
மலையும் மரங்களும் கடந்து;
மண்ணில் தான் விழும் நேரம்;
சிறுதும் கலங்காமல்;
சிறு புன்னகையில் தரை முத்தமிட்டு;
முடியும் பயணத்தில்,
முழுதாய் தன்னை கரைத்து கொள்கிறது;
மழைத்துளி!




Tuesday, September 17, 2019

வேடிக்கை!

மெல்ல மெல்ல தலை அசைத்து;
சிறு சிறு மழை துளி கையில் பிடித்து;
சாரல் தெளித்து; தன்னை முழுதாய் நனைத்து;
விழும் தூரலோடு விளையாடும் இலைகள்,
சாலை பார்த்து சிரித்து கொள்கிறது;
சர்ர்ர் என்று செல்லும் வாகனத்தில்,
அழகிய இம்மழைக்கு ஒளிந்து மனிதன் விரைந்து செல்வது கண்டு!

Saturday, August 31, 2019

நாயகன்!

சிவனே போற்றி என வரம் கேட்டு;
பத்து தலை கொண்டு;
மங்கை களவாடிய அசுரன் அவன்;
என்றே ஊரில் சொன்னர் பலர்!
வரலாறில் மறைந்து தான் போனது;
ஆண்மகனே, உன் வீறு கொண்ட வீரமும்,
போற்றும் ஆளுமையும்,
துணைவனாய் நீ கொண்ட காதலும்,
தமையனாய் உன் பாசமும்,
தலைவனாய் உன் மக்கள் பற்றும்!
ராவணனே!
துவண்டு போகாதே!
சொல்வதை சொல்லட்டும் சரித்திரம்;
சொல்லாமலே நீ நிமிர்ந்து நிற்பாய் கம்பிரமாய்;
தலை பத்திலும் தனி கர்வத்துடன்!
நீ,
அசுரனும் அல்ல
கடவுளும் அல்ல
உன் மக்களின் நாயகன்!


Wednesday, April 17, 2019

உரிமை!

இன்றைய விடியல் உங்கள் கையில்!
தொட்டுக்கொள்ளும் மையில், நுனிவிரல்
தன் உரிமை தெரிந்து கொள்ளட்டும்!
சிந்தனை செயல்படும் நேரம் இது!
தருணம் கை நழுவி போகும் முன்;
தலை நிமிர்ந்து வாக்கு அளியுங்கள்!
நேர்மை வெல்லட்டும்!
நமது ஆட்சி தொடங்கட்டும்!



Wednesday, November 21, 2018

கண்ணகி !!!

ஒலித்த அவள் குரலில்....
தன் நிலை தவறிய நீதி தலை குனிந்து நின்றது !
சினம் கொண்ட அவள் விழியில்....
கண்ணீர் நெருப்பை கலந்தது !
சபித்தாள்...
மார்பை அறுத்து எறிந்தாள்....
பத்தினி அவள் சொல்லுக்கு படைத்தவனும் கட்டுப்பட்டான் !
பற்றி எரிந்தது நகரம் !
படிந்த கரை எரிந்து போனது !
சிலம்பு ஒன்றில் அவள் கதை முடிந்து போனது!
காலம் சொல்லும் பெண் அவள்...
வாழ்ந்து சென்ற உண்மை அவள்...
கண்ணகி என்று பெயர் கொண்டவள் !

Wednesday, October 10, 2018

என் கவிதை!

என்னுள் போட்டிபோடும் வார்த்தைகளை....
பொக்கிஷமாய் பூட்டிவைக்க மனம் இல்லாமல்....
மை கொண்டு நிரப்பினேன் வெள்ளைத்தாளில்....
முற்றுப்புள்ளியை நெற்றிப்புள்ளியாக்கி அழகான கவிதையாய் வந்து நின்றது என் கண்முன்னே!